சீனா, பாகிஸ்தான் அமைதியாக இருக்க... பிரதமர் மோடியை புகழ்ந்த திரிபுரா முதல்-மந்திரி
|சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதியாக இருப்பதற்கு பிரதமர் மோடியின் வலிமையான தலைமையே காரணம் என்று திரிபுரா முதல்-மந்திரி பேசியுள்ளார்.
அகர்தலா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் சுர்மா சட்டசபை தொகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் முதல்-மந்திரி மாணிக் சஹா இன்று கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடி முன்னணியில் நின்று நாட்டை வழிநடத்த தொடங்கியதில் இருந்து, நாட்டின் ஓரங்குல நில பகுதியை கூட மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்ய முடியவில்லை.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் வழியே வலிமையான ஒரு செய்தியை அவர் தந்திருக்கிறார். அதன்பின்னர் எல்லையில் தொந்தரவு ஏற்படுத்தும் சம்பவங்கள் பெரிய அளவில் குறைந்து விட்டன.
2014-க்கு முன் குண்டு வெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் நம்முடைய வீரர்கள் மீது தாக்குதல்கள் ஆகியவை பற்றிய செய்திகள் அதிகம் வந்தன. ஊடுருவலால், வடகிழக்கும் இடையூறான பகுதியாக வகைப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எப்போதும் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தன.
அவர்கள் அமைதியாக இருப்பதற்கு பிரதமர் மோடியின் வலிமையான தலைமையே காரணம். அவர் பொறுப்பேற்று கொண்டதும், இந்திய பாதுகாப்பு படைகள் இன்னும் வலுவடைந்து உள்ளன என்று சஹா பேசியுள்ளார்.