நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
|நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சென்னை,
நெல்லை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.28 லட்சத்தை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வீட்டில் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதேபோல, நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையில் இருந்து நெல்லை வரும் ரெயிலில் ரூ.4 கோடி கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் ரெயிலை மறித்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
எனவே, இருவரையும் நெல்லை தொகுதி வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கும் கடந்த 9-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.