தேர்தல் விதிமுறை மீறல்: கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது வழக்கு
|காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்-மந்திரியுமாகவும் இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவரது சகோதரர் டி.கே.சுரேஷ், பெங்களூரு புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பெங்களூரு புறநகர் தொகுதியில் டி.கே.சிவக்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதியான யஷ்வந்தபுரம் பகுதியில் இருக்கும் சில அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று டி.கே.சுரேசுக்கு ஆதரவாக டி.கே.சிவக்குமார் பிரசாரம் செய்திருந்தார்.
பிரசாரத்தின்போது டி.கே.சிவக்குமார் பேசுகையில், 'எங்கள் மீது நம்பிக்கை வைத்தால், நாங்கள் முன்னால் நின்று உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். குடியிருப்பு வாசிகள் அனைவரும் டி.கே.சுரேசுக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்தி உள்ளோம். அதன்படி, உங்களது ஓட்டுகளை காங்கிரசுக்கு அளியுங்கள்' என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு உத்தரவாதங்கள் அளித்திருப்பதாக ஆசைவார்த்தை கூறி, காங்கிரசுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாக டி.கே. சிவக்குமார் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.