< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியவில்லை - மக்கள் புகார்
நாடாளுமன்ற தேர்தல்-2024

வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியவில்லை - மக்கள் புகார்

தினத்தந்தி
|
20 April 2024 4:30 AM IST

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது.

சென்னை,

வாக்காளர் அடையாள அட்டை இருக்கு, ஆனால் பட்டியலில் பெயர் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இதே பிரச்சினையை மக்கள் சந்திக்கின்றனர். அதற்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இந்த பிரச்சினை நீடிக்கிறது.

குறிப்பாக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்கள் பலரின் வாக்குச்சாவடிகள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இதனால் வயதானவர்கள் இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.

கோட்டூர்புரம் ஏ.எம்.எம்.மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிக்கு ஓட்டு போட வந்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ருக்குமணி ஜீவா என்ற மூதாட்டி காலை 7 மணி முதல் சுமார் 9 மணி வரை அங்கும் இங்கும் அலைந்து பார்த்து மிகவும் சோர்வடைந்து இறுதியில் ஓட்டு போடாமல் புறப்பட்டு சென்றார்.

இது ஒருபுறம் இருக்க சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நின்றிருந்த வாக்காளர்களில் பலர் தங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலிலும் வாக்களித்துள்ளேன். ஆனால், இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவித்தனர்.

அந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றபோது அங்கும் இதேபோன்று ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்று ஆதங்கப்பட்டனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா கூறுகையில், 'தி.நகர் பகுதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளேன் எவ்வித பயனும் இல்லை. திட்டமிட்டு நீக்கப்பட்டது' என்று கூறியுள்ளார்.

இதே போன்று, அசோக் நகரை சேர்ந்த சூர்யகுமார் - கலைச்செல்வி தம்பதி கூறும் போது, ''எங்கள் மகனுக்கு ஓட்டு இருக்கிறது. ஆனால் எங்களுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்கிறார்கள்'' என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர். அதேபோன்று அசோக் நகர் 11-வது அவென்யூவை சேர்ந்த சண்முகம், பத்மா, மகேந்திரன், கார்த்திகா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு வாக்கு இல்லை என்று சண்முகம் என்பவர் தெரிவித்தார். அசோக் நகர் 9-வது அவென்யூவைச் சேர்ந்த கோவில் பிள்ளை என்பவரும் தனக்கு வாக்கு இல்லை என்று தெரிவித்தார்.

ஆதம்பாக்கத்தில் உள்ள ஜி.என்.செட்டி உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் திரும்பி சென்றனர்.இதேபோன்று வடசென்னை தொகுதியில் மணலியில் உள்ள 4 வார்டுகளில் 5 ஆயிரம் பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:-

ஒருவர் தன்னிடம் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால் வாக்கு இல்லை என்று புகார் கூறுகிறார். நாம் எந்த பகுதியில் குடியிருக்கிறோமோ, குடிபெயர்கிறோமோ அந்த பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதுமானது. முன்பு எல்லாம் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டும், தேர்தலுக்கு முன்பும் மட்டுமே தயாரிக்கப்படும்.

ஆனால் தற்போது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களின் 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது உடையவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே ஆண்டுக்கு 4 முறை பட்டியலில் பெயர் சேர்க்கவும், முகவரி மாற்றவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதேபோல் இந்த தேர்தலுக்கு கடந்த மார்ச் 27-ந்தேதி வரை விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதனை அரசு அலுவலகங்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மட்டுமே சென்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது ஒருவர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதனை ஆன்லைன் முறையில் எளிதாக பார்த்து விடலாம். இப்படி பல வாய்ப்புகளை எல்லாம் விட்டு, விட்டு தேர்தல் நாளன்று வந்து எனது பெயர் இல்லை என்று புகார் கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே இனி வருங்காலங்களில் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், உடனே பெயர் சேர்க்க மனு கொடுக்க வேண்டும். பின்னர் பட்டியலில் சேர்ந்து விட்டதா? என்பதனையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்