தேர்தலின்போது பணம் பறிமுதல்: வழக்குப்பதிவு செய்ய முடியுமா..? - அமலாக்கத்துறை பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடமிருந்து ரூ.3.99 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர். இதேபோல நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸூக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக நெல்லை தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளரின் அலுவலகத்தில் இருந்து ரூ.28.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளரான சி.எம்.ராகவன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ், "தேர்தல் நேரத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றமாக கருத முடியாது. இருப்பினும் இதுதொடர்பாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக அமலாக்கத்துறை நாளைக்குள் (புதன்கிழமை) பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.