< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

தினத்தந்தி
|
4 May 2024 7:57 AM IST

கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக ஏப்ரல் 26, மே 7-ந் தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் 69.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் பெலகாவி, சிக்கோடி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, பீதர், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, பல்லாரி, தார்வார், கொப்பல், உத்தர கன்னடா, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய 14 தொகுதிகளில் நடக்கிறது. இதில் 227 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இதையொட்டி அங்குள்ள தொகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்கள் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் கொளுத்தும் வெயிலில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் தங்களுக்கு தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான பிரசாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்களின் பிரசாரத்தை கர்நாடகாவில் முடித்துக் கொண்டனர். தற்போது கர்நாடக தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்