இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
|விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
4 முனை போட்டி நிலவும் தமிழகத்தில் பிரதமர் மோடி 9 முறை தமிழகம் வந்து பா.ஜனதா அணிக்காக பிரசாரம் செய்துள்ளார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் தமிழகத்தில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 முறை தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி (வடசென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை) ஆகியோரை ஆதரித்து நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொளத்தூர், ஐ.சி.எப். உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்றவாறு வீதி, வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். மாலையில் காஞ்சீபுரம் படப்பை பகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்கள் க.செல்வம் (காஞ்சீபுரம்), டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் பிரகாஷ், ஈஸ்வரசாமி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.
எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் மேச்சேரியில் தர்மபுரி அ,தி.மு.க. வேட்பாளர் அசோகனை ஆதரித்தும், ஜலகண்டாபுரம் மற்றும் எடப்பாடியில் சேலம் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து அருப்புக்கோட்டையில் பிரசாரம் செய்தார்.
ராஜ்நாத் சிங்
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவு திரட்டினார்.
இதேபோல் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பரமகுடியிலும், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியிலும், தென்காசி தொகுதியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து தென்காசியிலும் வாகன பேரணி நடத்தினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம், புதுச்சேரி தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இன்று இறுதிக்கட்ட பிரசாரம்
இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும், இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்துவிடும்.
புதுச்சேரியிலும் இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அங்கும் முதல்-மந்திரி ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனிடையே தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று பிரசாரம் நிறைவடைவதால் தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.