ரேபரேலியை 'குடும்ப தொகுதி' என அழைப்பதா? - பிரியங்கா காந்திக்கு அமித்ஷா கண்டனம்
|ரேபரேலியை ‘குடும்ப தொகுதி’ என அழைப்பதா? என பிரியங்கா காந்திக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். ராகுல் காந்திக்கு ஆதரவாக அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி ரேபரேலியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ரேபரேலியை 'குடும்ப தொகுதி' என அழைப்பதா? என பிரியங்கா காந்தியை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ரேபரேலியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "ரேபரேலி எந்த குடும்பத்திற்கும் சொந்தமான தொகுதி கிடையாது, அது மக்களின் தொகுதி" என்று தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான அழைப்பிதழை நிராகரித்து விட்டதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அயோத்தி கோவிலுக்கு மீண்டும் பூட்டு போட்டுவிடுவார்கள் என்று தெரிவித்தார். அதோடு காந்தி குடும்பத்தினர், இயற்கை சீற்றங்கள் உள்பட எந்த சமயத்திலும் ரேபரேலி தொகுதிக்கு வந்ததே கிடையாது என்றும் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.