< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல்; தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல்; தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம்

தினத்தந்தி
|
16 March 2024 6:01 PM IST

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று மதியம் அறிவித்து உள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி மார்ச் 10-ந்தேதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 11-ந்தேதி முதல், தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ந்தேதி அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில், 2024-ம் ஆண்டில் இதேபோன்று 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.

இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறும்.

இதேபோன்று, கன்னியாகுமரிக்கு உட்பட்ட விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மக்களவை தொகுதியில், நாகர்கோவில், கன்னியாகுமரி, கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் என 6 தொகுதிகள் வருகின்றன. இதனால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த தொகுதியில், எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்த நிலையில் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக விஜயதரணி கடந்த 2 முறை பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். இதனால், அவருக்கு 2021-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பளித்தது. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டு, ஒரு கட்சியை விட்டு வேறு கட்சிக்கு சென்ற நிலையில், எம்.எல்.ஏ. பதவியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு, அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில், வரவுள்ள மக்களவை தேர்தலுடன் சேர்த்து, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்து உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியே அதிக முறை வெற்றி பெற்ற சூழலில், இந்த முறை தொகுதியை, காங்கிரஸ் கட்சிக்கு வழங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய கட்சியில் இணைந்து எம்.பி.யாக கூடிய விருப்பத்தில் உள்ள விஜயதரணி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க.வில் மூத்த நிர்வாகி பொன். ராதாகிருஷ்ணன் இந்த தேர்தலில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், இந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என்பது கட்சியினரால் ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதன் தொடர்ச்சியாக, பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதனால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக பொன்முடி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. இது குழப்பம் ஏற்படுத்திய சூழலில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். இதன்படி, திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும்.

மேலும் செய்திகள்