< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் - டி.கே.சிவக்குமார் பேட்டி

கோப்புப்படம் 

நாடாளுமன்ற தேர்தல்-2024

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் - டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
18 April 2024 6:31 AM IST

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தோ்தலையொட்டி துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?. கர்நாடகத்தில் அந்த கட்சி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி செய்துள்ளது. பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக அவர் கூறினார். அதை செய்தாரா? ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். அதன்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கினாரா? விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்துவதாக சொன்னார். அதை செய்து காட்டினாரா?

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மேகதாது திட்டத்திற்காக போராட்டம் நடத்தினோம். இதற்கு பணிந்து அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜனதா ரூ.1,000 கோடி ஒதுக்கியது. பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாததால் ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. மேகதாது திட்டத்தை அமல்படுத்தினால் பெங்களூருவுக்கு குடிநீர் வழங்க முடியும்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற்று அதை அமல்படுத்துவோம். இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பயன் கிடைக்கும். இதற்கு ஆட்சேபனை இல்லை என்று சுப்ரீம் கோா்ட்டில் தமிழ்நாட்டு வக்கீல்கள் கூறினர். சுப்ரீம் கோர்ட்டும், இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்