பா.ஜனதாவின் 9 தவறுகளால் பிஜு ஜனதாதளத்தின் வெற்றி உறுதி - வி.கே.பாண்டியன்
|பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
புவனேஸ்வரம்,
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. பிஜு ஜனதாதளம்-பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குக்கு நெருக்கமான பிஜு ஜனதாதள மூத்த தலைவரும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வி.கே.பாண்டியன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா 9 வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை தவறுகள் என்றும் சொல்லலாம். அதனால் பிஜு ஜனதாதளத்தின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது. பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது.
3 கட்ட தேர்தல்களிலேயே எங்களுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. இனி நாங்கள் பலமாக இருக்கும் இடங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பா.ஜனதா செய்த முதல் தவறு, கடவுள் ஜெகநாதரை தேர்தல் பிரசாரத்தில் இழுத்ததும், நவீன் பட்நாயக்கை அநாகரீகமாக விமர்சித்ததும் ஆகும். மிகவும் மதிக்கப்படும் நவீன் பட்நாயக்கை மோசமான வார்த்தைகளால் பேசுவதை ஒடிசா மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், 'மிஷன் சக்தி' திட்டத்தை மூடுவதாக பா.ஜனதா அளித்த வாக்குறுதி, 2-வது தவறு ஆகும். 70 லட்சம் பெண்கள் அத்திட்டத்தில் உள்ளனர். அதனால் பெண்களிடையே பீதி நிலவுகிறது. பிஜு சுவஸ்தியா கல்யாண் யோஜனா திட்டத்துக்கு பதிலாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று பா.ஜனதா அறிவித்தது 3-வது தவறு. ஆயுஷ்மான் பாரத் திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கானது. ஆனால், எங்கள் திட்டத்தில் 90 சதவீதம்பேர் பலன் அடைகிறார்கள்.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பா.ஜனதா நிறுத்தி விடும். பழங்குடியினருக்கான சிறப்பு வளர்ச்சி கவுன்சில்களை பா.ஜனதா கலைத்துவிடும் என்று பழங்குடியினர் பயப்படுகிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும், சிறு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் கலாசாரம் வந்து விடும் என்றும் மக்கள் பயப்படுகிறார்கள்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 அளிப்பதாக பா.ஜனதா கூறுவதை மக்கள் நம்பவில்லை. 90 சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் அளிப்பதாக பிஜு ஜனதாதளம் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், சூரியசக்தி மின்சாரம் அளிப்பதாக பா.ஜனதா சொல்கிறது. 'உஜ்வாலா' திட்டத்துக்கு ஏற்பட்ட கதிதான் அதற்கும் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.50 ஆயிரம் அளிப்பதாக பா.ஜனதா சொல்கிறது. அதற்கு மொத்தம் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும். இது, அக்கட்சியின் வெற்று வார்த்தை." என்று அவர் கூறினார்.