"தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பா.ஜனதாவுக்கு கிடைக்காது" - தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேச்சு
|தமிழை பற்றி பேசி பிரதமர் மோடி வாயில் வடை சுடுகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன் பேசினார்.
சென்னை,
மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து வெங்கடாசலபதி தெரு, கந்தன் தெரு, பிள்ளையார் கோவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, அவ்வைபுரம், அப்பாராவ் தோட்டம் பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அயோத்தியா நகர், டாக்டர் நடேசன் ரோடு, ராஜாஜி நகர், ராமாராவ் கார்டன், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜீப் மற்றும் ஆட்டோவில் சென்றும், நடைபயணமாகவும், வீடு வீடாகவும் சென்று தயாநிதி மாறன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய தயாநிதி மாறன், "நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக தி.மு.க. வேட்பாளராக என்னை மத்திய சென்னை தொகுதி மக்களாகிய உங்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். இது உங்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை. நிச்சயமாக இந்த தேர்தலில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
நாம் வெற்றி பெற்றால் நாளை இந்தியாவை ஆளும் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யக்கூடிய பொறுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.
மிக்ஜம் புயலில் நாம் பாதிக்கப்பட்ட போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக முன்வந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கினார். ஆனால் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி வந்து பார்த்தாரா? இல்லை. நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். நாம் கஷ்டப்பட்ட போது வந்து பார்க்காத மோடி இப்போது வருகிறார். மோடி ஓட்டுக்கு மட்டும் தான் வருவாரே தவிர, வேறு எதற்கும் வர மாட்டார். 'தமிழ் என் தாய்மொழியாக இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்றெல்லாம் சொல்லி வாயிலே வடை சுடுகிறார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இதுவரை என்ன செய்துள்ளார் பிரதமர் மோடி?
மோடி அவர்களே, நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திராவிட மண்ணில் பிறந்தவர்கள். நீங்கள் எத்தனை நாட்கள் தமிழகத்தில் தங்கினாலும் தமிழகத்தில் ஒரு சீட்டு கூட வராது" என்று அவர் பேசினார்.