'தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்' - அமித்ஷா
|தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக கடந்த மாதம் 26-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மீதம் உள்ள 14 தொகுதிகளுக்கு வரும் 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தின் ஹாவேரி பகுதியில் இன்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடிக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. ஹாவேரி தொகுதியில் பா.ஜ.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்.
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பா.ஜ.க. உறுதியாக முன்னேறி வருகிறது. நிச்சயமாக நாங்கள் அந்த இலக்கை அடைவோம்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை எளிதான மொழியில் மக்களிடம் பிரதமர் மோடி எடுத்துக் கூறியுள்ளார். அது மக்களுக்கும் புரிந்துவிட்டதால் காங்கிரஸ் கட்சி தற்போது மிகுந்த அவநம்பிக்கையுடன் இருக்கிறது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றிவிடுவார்கள் என எதிர்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். எங்களிடம் 10 ஆண்டுகளாக பெரும்பான்மை இருந்திருக்கிறது. நாங்கள் அரசியலமைப்பை என்ன செய்துவிட்டோம்? சட்டப்பரிவு 370, முத்தலாக் ஆகியவற்றை ரத்து செய்யவும், நாட்டை பலப்படுத்தவும் எங்கள் பெரும்பான்மையை நாங்கள் பயன்படுத்தினோம்.
தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி மிகுந்த பயத்தில் உள்ளதால் எனது பேச்சை தவறாக சித்தரித்து வெளியிடுகிறார்கள். எங்கள் ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்யவில்லை. அப்படி செய்யவும் நாங்கள் விரும்பவில்லை."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.