ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்
|ராகுல் காந்தியின் ’மேட்ச் பிக்சிங்’ கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க , அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலை "மேட்ச் பிக்ஸிங்" என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, "தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை 'மேட்ச் பிக்ஸிங்' என்கின்றனர்.
இப்போது நாடாளுமன்ற தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் 'மேட்ச் பிக்ஸிங்'கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இந்தியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே 'மேட்ச் பிக்ஸிங்'தான். நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது. 'மேட்ச் பிக்ஸிங்' இல்லாமல் இது சாத்தியமாகாது. அந்த கட்சியால் 180 தொகுதிக்கு மேல் பெற முடியாது" என்றார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க , அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் புரி, "நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்ற தேர்தல் 'மேட்ச் பிக்ஸிங்' என்றும், மத்திய அரசு தனது ஆட்களை தேர்தல் ஆணையத்தில் நிறுத்தியுள்ளது என்றும் கூறி இருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.