பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்காக நன்றி தெரிவிக்கின்றேன்: பிரதமர் மோடி
|நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி 140 கோடி மக்களுக்கான வெற்றி என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
டெல்லி
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.
இதில், பா.ஜ.க. சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் மாற்றம் ஏற்படுத்த மக்கள் வாக்களித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி 140 கோடி மக்களுக்கான வெற்றி. 3-வது முறையாக மக்களின் ஆசி கிடைத்துள்ளது. பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, தாயை இழந்த பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால், நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்கள் தங்களின் அன்பை என் மீது பொழிந்துள்ளனர் என்று பேசியுள்ளார். தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்காக அனைவருக்கும் நன்றி. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பேசியுள்ளார். கோடிக்கணக்கான ஏழைகளுக்கு 5 கிலோ இலவச தானியம் கிடைத்துள்ளது என்றும் பேசியுள்ளார்.