< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறிக்கிறது - ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல்-2024

'தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறிக்கிறது' - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
2 May 2024 10:28 AM GMT

தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

மோடியின் 'தனியார்மயமாக்கல்' மாடல் மூலம் நாட்டின் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், இதன் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீடு பறிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நரேந்திர மோடியின் இடஒதுக்கீட்டை அகற்றும் பிரச்சாரத்தின் மந்திரம் என்னவென்றால், 'மூங்கில் இல்லையெனில் புல்லாங்குழல் இல்லை', அதாவது அரசு வேலைகள் இல்லாவிட்டால், இடஒதுக்கீடு இருக்காது.

'கண்மூடித்தனமான தனியார்மயமாக்கல்' மூலம் அரசு வேலைகளை ஒழித்துவிட்டு, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது.

2013-ல் பொதுத்துறையில் 14 லட்சம் நிரந்தரப் பணியிடங்கள் இருந்தன. ஆனால் 2023-ல் 8.4 லட்சம் பணியிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

BSNL, SAIL, BHEL போன்ற உயர்மட்ட பொதுத்துறை நிறுவனங்களை அழித்ததன் மூலம், பொதுத்துறையில் மட்டும் சுமார் 6 லட்சம் நிரந்தர வேலைகள் நீக்கப்பட்டன. இவை இடஒதுக்கீட்டின் பலனால் கிடைக்கக் கூடிய பதவிகள் ஆகும்.

ரெயில்வே போன்ற நிறுவனங்களில் அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதன் மூலம் பின்வாசல் வழியாக நீக்கப்பட்ட பணியிடங்களுக்கு கணக்கே இல்லை.

மோடியின் 'தனியார்மயமாக்கல்' மாடல், நாட்டின் வளங்களை சூறையாடுகிறது. இதன் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது.

காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம், பொதுத்துறைகளை வலுப்படுத்தி, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் வேலைவாய்ப்புக் கதவைத் திறப்போம் என்பது காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம்."

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்