5ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க. - இமாச்சலபிரதேசத்தில் நடிகை கங்கனா ரனாவத் போட்டி
|நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் களமிறங்கியுள்ளார்.
டெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஏற்கனவே 4 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்க உள்ளார். கங்கனா இமாச்சலபிரதேசத்தின் மண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேனகா காந்தி உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் போட்டியிடுகிறார்.
5ம் கட்டமாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் 111 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.