இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
|பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.
மத்திய அரசு செயலாளர்களில் 3 சதவீதம் பேர்கூட ஓ.பி.சி. பிரிவினர் இல்லை. அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது. போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது; சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.
தி.மு.க.விற்கு சமூகநீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது. பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது. வன்னியர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அரசு தான். நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.
100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல பா.ஜ.க. தீட்டியிருக்கும் திட்டங்களுக்கு தடை போடும் அறிக்கையாக காங்கிரஸின் தேர்தல் அறிக்கை உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. வெள்ளம் வந்த போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார்.
தனது எஜமானருக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் பொய்களை சொல்லி வருகிறார். தான் கொடுத்த அழுத்தத்தால் 1,000 ரூபாயை தி.மு.க. தருவதாக எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருகிறார்; ரூ1,000 உரிமைத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தார் என்றே மக்கள் சொல்வார்கள்.
உளுந்தூர்பேட்டையில் விரைவு ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.