< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஊழலுக்கு விடை கொடுத்து  தாமரை மலரட்டும் - ஜே.பி.நட்டா பேச்சு
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஊழலுக்கு விடை கொடுத்து தாமரை மலரட்டும் - ஜே.பி.நட்டா பேச்சு

தினத்தந்தி
|
11 April 2024 12:50 PM IST

சிக்கிம் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 'அம்மா கேன்டீன்' தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்டாக்,

32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு ஏப்.19 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அம்மாநிலத்திற்கான பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

சிக்கிமில் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா கேன்டீன்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என்றும், சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்றும் இளைஞர்களுக்கு அதிகாரம், சுற்றுலா துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட பின் கூறியதாவது:-

முந்தைய அரசுகள், தனிமைப்படுத்துவதிலும், புறக்கணிப்பதையுமே நம்பின. ஆனால், பிரதமர் மோடி மட்டும் கிழக்கை பாருங்கள், கிழக்கு நோக்கி செயல்படுங்கள் ' எனக்கூறினார். மத்திய அரசுடன் இணைந்து இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஆகியவற்றை நிறுவுவோம்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. உக்ரைன் போரால் ரஷிய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவுக்கும், ஜப்பானுக்கும் இதே நிலைமைதான். ஆனால், பிரதமர் மோடி தலைமையில் இந்திய பொருளாதாரம் 5வது இடத்திற்கு முன்னேறியது.

இரும்பு உற்பத்தியில் நாம் 2வது இடத்தில் இருக்கிறோம். ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தில் இருக்கிறோம். மொபைல் போன்கள், சீனாவிற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஊழலுக்கு விடை கொடுத்து சிக்கிமில் தாமரை மலரட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் சிக்கிம் மாநிலம் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்