பா.ஜ.க. ஆட்சியால் சாமானியர்களின் தூக்கம் போனது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
|நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நோக்கம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம்,
சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
மூன்று ஆண்டு கால தி.மு.க.வின் நல்லாட்சி, தமிழகத்தில் நடக்கும் உண்மையான மக்களாட்சி. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியால் சாமானிய மக்களின் தூக்கம் தான் போய்விட்டது
சாதாரண மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் என பலரும் மோடி ஆட்சியால் நிம்மதியும் தூக்கமும் இழந்தனர். தேர்தல் பத்திர ஊழலுக்கு பின் வட மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. உளவுத்துறை அறிக்கைக்குப் பிறகு மோடி தான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் கூட இல்லை. நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.க.வின் நோக்கம். வேட்பாளர்கள் இல்லை என்பதால் முன்னாள் கவர்னர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
பெண்களின் முன்னேற்றம் பற்றி பேச பிரதமருக்கு தகுதி உண்டா? மோடி ஆட்சியில் தான் பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் மணிப்பூரில் பெண்களுக்கு வன்கொடுமைகள் நடைபெற்றன. பில்கிஸ் பானு உள்ளிட்ட பெண்கள் மீதான வன்கொடுமைகள் பா.ஜ.க. ஆட்சியில் தான் நடைபெற்றன.
மதத்தால், சாதியால், தமிழக மக்களை பா.ஜ.க. பிரிக்க முயல்கிறது. புண்ணிய பூமியான தமிழகத்தில் பா.ஜ.க.வின் நாடகம் ஒருபோதும் பலிக்காது. தி.மு.க. இருக்கும் வரைக்கும் இங்கு மோடி மஸ்தான் வித்தை எல்லாம் பலிக்காது. புண்ணிய பூமி என்று சொல்லும் மோடி தமிழக வெள்ள பாதிப்புகளை ஏன் பார்க்க வரவில்லை? பெரியார் மண்ணில் பா.ஜ.க.வின் நாடகமெல்லாம் எத்தனை நாட்கள் சென்றாலும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.