< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
தமிழினத்தை பா.ஜ.க. அவமதித்துள்ளது - அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் காட்டம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழினத்தை பா.ஜ.க. அவமதித்துள்ளது - அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் காட்டம்

தினத்தந்தி
|
3 Jun 2024 11:43 AM IST

வி.கே. பாண்டியனை கண்டு பா.ஜ.க. அஞ்சுவது ஏன்? என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில், பிஜு ஜனதா தளம் - பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதனிடையே, முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். அவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார்.

அதேவேளை, நவீன் பட்நாயக்கின் அரசை பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் நடத்துவதாகவும், ஒடிசாவில் மீண்டும் பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்றால் வி.கே.பாண்டியன் முதல்-மந்திரியாக்கப்படுவார் என்றும், தமிழர் ஒடிசா முதல்-மந்திரியாக அனுமதிக்கக்கூடாது என்றும் பா.ஜ.க. பிரசாரம் செய்தது. குறிப்பாக, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இந்த கருத்துக்களை பிரசாரத்தில் தெரிவித்தனர்.

சமீபத்தில் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றை பா.ஜ.க. வெளியிட்டது. அதில் ஒரு நபரை வி.கே. பாண்டியன் போல சித்தரித்து அவருக்கு தமிழர் பாரம்பரியமிக்க வேட்டை - சட்டை அணிந்தவாறு ஓட்டலில் வாழை இலையில் உணவு அருந்துவதுபோலவும் அதை மற்றவர்கள் கேலி செய்வது போலவும் வீடியோ வெளியிட்டப்பட்டிருந்தது. வாழை இலையில் பழைய சோறு வைப்பதுபோன்று அப்போது உணவு வாழை இலையை விட்டு வெளியே பழைய சோறு கொட்டுவதுபோன்றும் பா.ஜ.க. விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. வெளியிட்டுள்ள இந்த விளம்பரம் வீடியோவுக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,

"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்!

ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!

தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.

வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.

உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.

எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?

கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர்.

தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.

ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.

மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்! வி.கே. பாண்டியன்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்