< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை பா.ஜ.க. விரும்பவில்லை - கெஜ்ரிவால் விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தல்-2024

'நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை பா.ஜ.க. விரும்பவில்லை' - கெஜ்ரிவால் விமர்சனம்

தினத்தந்தி
|
14 May 2024 4:52 PM GMT

தேர்தல் பிரசாரம் செய்வதில் இருந்து தன்னை தடுக்க பா.ஜ.க. முயன்றதாக கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

சண்டிகர்,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், அரியானா மாநிலம் குருஷேத்திரா மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குமார் குப்தாவை ஆதரித்து கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

"நான் சுமார் 50 நாட்கள் சிறையில் இருந்தேன். எனது உடல் எடை 5 கிலோ குறைந்துவிட்டது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 16-ந்தேதி வெளியான நிலையில், மார்ச் 21-ந்தேதி நான் கைது செய்யப்பட்டேன். நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை பா.ஜ.க. விரும்பவில்லை.

இன்று நான் உங்கள் முன்பு பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் மீண்டும் ஜூன் 2-ந்தேதி சிறைக்கு செல்ல வேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். துடைப்பம் சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்.

என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை, நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும். நான் செய்யப்போகும் அடுத்த தவறு என்னவென்றால், டெல்லியில் உள்ள அனைத்து பெண்களின் வங்கிக் கணக்குகளிலும் மாதம் ரூ.100 செலுத்த தயாராகி வருகிறேன்."

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்