292 இடங்களில் வெற்றி: மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா
|இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
புதுடெல்லி,
இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து 'இந்தியா கூட்டணி' என்று ஓர் அணியை அமைத்தன.
தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.
ஆளும் பா.ஜனதாவும் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்தது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதியநீதிகட்சி, அ.தி. மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் இடம் பெற்றன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியிலும் சேராமல் போட்டியிட்டன.
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார்.
இந்தமுறை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் களம் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
ரேபரேலியில் பிரியங்கா களம் இறக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வந்தநிலையில், அங்கு ராகுல்காந்தியே களம் இறங்கினார். அமேதியில்மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் கே.எல்.சர்மா களம் இறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது பெரும் பேசு பொருளாக இருந்தது. ஊழல், சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பிரதான இடத்தை பிடித்தது.
பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்துக்கும் பலமுறை வந்து பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் நாடு முழுவதும் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி குறிப்பிட்ட சில இடங்களில் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் தாக்கம், கோடை வெயிலைவிட அனல் பறந்தது.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.
அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந்தேதி ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாறி மாறி முன்னிலை
நாடு முழுவதும் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்தனர். மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜனதா கட்சியே கைப்பற்றும் நிலையில் இருந்தன.
அதே நேரம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியும் பல இடங்களில் முன்னிலை வகித்தது. இரு கூட்டணிகளும் பல இடங்களில் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.
இதனால் மும்பை பங்குச்சந்தை வர்த்தகமும் பெரும் சரிவை எதிர்கொண்டது.
பா.ஜனதா அமோகம்
வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேபோல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சுமார் 7½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அதே நேரம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 16 இடங்களை பிடித்துள்ளன.
வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல்காந்தி, 2 தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பெருவாரியான வெற்றியை பெற்றார். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு யாரும் எதிர்பாரத வகையில் உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.
இதேபோல் மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 31 இடங்களை கைப்பற்றியுள்ளது.
40 தொகுதிகளை அள்ளிய தி.மு.க கூட்டணி
எப்போதும்போல் தமிழகத்தின் தேர்தல் முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர், தர்மபுரி தொகுதிகளில் மட்டும் முன்னணி நிலவரம் மாறி மாறி வந்தது. முடிவில் அந்த 2 தொகுதிகளும் தி.மு.க. கூட்டணி வசம் சென்றன.
இதேபோல் பலரும் எதிர்பார்த்து இருந்த கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தி.மு.க.வே வெற்றி பெற்றது.
தனிப்பெரும்பான்மை இல்லை
புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.
எனவே பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பா.ஜனதா இன்று (புதன்கிழமை) கூட்டியுள்ளது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.
கருத்துக்கணிப்புகளை பின்னுக்கு தள்ளிய முடிவுகள்
கடந்த 1-ந்தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பா.ஜனதா கூட்டணிக்கு 350 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 125 இடங்களே கிடைக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள், அந்த கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதே நேரம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. அதுபோல் 40 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல்
இதேபோல் தமிழகத்தில் குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஒடிசா மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தன. ஒடிசாவில் பா.ஜனதாவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும் ஆட்சியை பிடித்துள்ளது.