அனிதா ராதாகிருஷ்ணன் கூறிய அந்த வார்த்தை.. வீடியோவை பகிர்ந்து கண்டனம் தெரிவித்த அண்ணாமலை
|தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி.யிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை:
சேலத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழகத்தின் முக்கிய தலைவர்களான காமராஜர், மூப்பனார், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார்.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். பிரதமர் மோடி சேலத்தில் பேசியதை மேற்கோள் காட்டி பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நீங்கள் எல்லாம் டெல்லியில் காமராஜரை கொல்ல நினைத்த பாவிகள்" என்றார். அப்போது அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோ கிளிப்பையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
பிரதமருக்கு எதிராக இழிவான மன்னிக்க முடியாத வார்த்தையை பேசியதன் மூலம் தி.மு.க. தலைவர்கள் தரம்தாழ்ந்த நிலையை அடைந்துள்ளனர். எங்களை விமர்சனம் செய்வதற்கு எதுவுமே இல்லாத நிலையில், இந்த நிலைக்கு சென்றுள்ளனர். அப்போது மேடையில் இருந்த தி.மு.க. எம்.பி. கனிமொழிகூட, அமைச்சரை தடுக்கவில்லை.
இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிகவும் இழிவான முறையில் பேசியிருப்பதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. துணை தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது வேட்பாளர் கனிமொழியும் உடனிருந்ததால், அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.