பிரச்சாரத்தை தடுக்க முயற்சி; சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு மஹுவா மொய்த்ரா கடிதம்
|4 விசாரணைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பா.ஜ.க. எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணையை தொடர்ந்து மஹுவா மொய்த்ரா கடந்த டிசம்பர் மாதம் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ந்தேதி உத்தரவிட்டது. இதன்படி கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனது பிரச்சார பணிகளை தடை செய்து, தன் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுவதாகவும், இதுவரை நடத்தப்பட்ட 4 விசாரணைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மத்திய விசாரண அமைப்புகளின் விசாரணைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் மஹுவா மொய்த்ரா வலியுறுத்தியுள்ளார்.