< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் - நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தல்-2024

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் - நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது

தினத்தந்தி
|
30 March 2024 3:49 PM IST

கிருஷ்ணகிரி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்து பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கரும்பு விவசாயி சின்னத்தில் தமிழகத்தில் 17 தொகுதிகளில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி போட்டியிடுகிறது.

திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஆறுமுகம் என்பவர் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியுடன் இணைந்து கிருஷ்ணகிரியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனை முடிந்து ஓசூருக்கு காரில் சென்று கொண்டிருந்த ஆறுமுகத்தை, நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ் குமார், கட்சி உறுப்பினர் கமல் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்