பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத்தின் சொத்து மதிப்பு விவரம்
|மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சிம்லா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று கங்கனா ரனாவத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அந்த வேட்புமனுவில் கங்கனா ரனாவத் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதன்படி கங்கனா ரனாவத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.90 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.28.7 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 62.9 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கங்கனா ரனாவத்திடம் கையிருப்பு தொகையாக ரூ.2 லட்சம் உள்ளதாகவும், வங்கி கணக்கில் ரூ.1.35 கோடி உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மும்பை, பஞ்சாப் மற்றும் மணாலியில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.3.91 கோடி மதிப்பிலான 3 சொகுசு கார்கள் தன்னிடம் இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.
வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, கங்கனா ரனாவத்திடம் ரூ.5 கோடி மதிப்பிலான 6.7 கிலோ தங்கம், ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும், அவரது பெயரில் 50 இன்சூரன்ஸ் பாலிசிகள் மற்றும் ரூ.7.3 கோடி மதிப்பிலான கடன்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கங்கனா ரனாவத் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் உள்பட மொத்தம் 8 கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.