< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது:  சஞ்சய் சிங்
நாடாளுமன்ற தேர்தல்-2024

கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது: சஞ்சய் சிங்

தினத்தந்தி
|
7 April 2024 9:49 PM IST

கெஜ்ரிவால் இருக்கும் வரை பா.ஜ.க.வால் டெல்லியில் வெற்றி பெற முடியாது. ஒருபோதும் அரசமைக்கவும் முடியாது என சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை ஏப்ரல் 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நாட்டில், முதல்-மந்திரியாக உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது இது முதல் முறையாகும். எனினும் கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். கைது நடவடிக்கையால், அவர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் இன்று கூறும்போது, கெஜ்ரிவால் இருக்கும் வரை டெல்லியில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. ஒருபோதும் அரசமைக்கவும் முடியாது என உறுதிப்பட கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் முழு நம்பிக்கையோடும், நேர்மையோடும் ஆட்சியை நடத்தினார். ஆனால், 2 பொய்யான அறிக்கைகள் அடிப்படையில், கெஜ்ரிவால் சிறையில் தள்ளப்பட்டு உள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி ஒருவரை நீங்கள் கைது செய்திருக்கிறீர்கள்.

பா.ஜ.க.வில், அனைத்து வகையான ஊழல்வாதிகளும் உள்ளனர். ஆனால், ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என அவர்கள் கூறுகின்றனர் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் செய்திகள்