அனுமான் கோவிலில் அரவிந்த் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
|கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று மாலை நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்னுடன் கலந்து கொள்கிறார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே அவரை மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.கட்சியின் கொடி மற்றும் சின்னமான துடைப்பங்களுடன் ஏராளமான தொண்டர்களும் திரண்டு கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் வரை வாகன பேரணியாக சென்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மேலும் இவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், டெல்லி மந்திரி அதிஷி மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள உடன் இருந்தனர்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று (சனிக்கிழமை) மாலை நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்னுடன் கலந்து கொள்கிறார்.