அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
|சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட பா.ஜனதா வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இடாநகர்,
அருணாசல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி அங்கு 2 மக்களவை தொகுதிகளுக்கும், 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கிய நிலையில், 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் முதல்-மந்திரி பெமா காண்டு மற்றும் துணை முதல்-மந்திரி சவுனா மெய்ன் உள்பட பா.ஜனதா வேட்பாளர்கள் போட்டியிடும் 10 தொகுதிகளில் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் அவர்கள் 10 பேரும் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வாகினர். மாநில தேர்தல் அதிகாரி பவன் குமார் இதனை அறிவித்தார்.
மேலும் இந்த 10 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல் வேட்புமனு வாபஸ் பெற்ற பிறகு அருணாசல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று பவன் குமார் கூறினார்.