பிரசார பணிகளுக்கு அனுமதி கேட்டு தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் குவியும் விண்ணப்பங்கள்: முதல் இடத்தில் தமிழ்நாடு
|பிரசார பணிகளுக்கு அனுமதி பெற தேர்தல் கமிஷனின் ‘சுவிதா’ வலைத்தளத்தில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
புதுடெல்லி,
தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்துதல், தற்காலிக கட்சி அலுவலகங்கள் திறத்தல், வீடியோ பிரசார வேன்களை இயக்குதல், வாகன அனுமதி, வீடு, வீடாக பிரசாரம், ஹெலிகாப்டர் பிரசாரம் உள்பட பல்வேறு அனுமதியை பெற தேர்தல் கமிஷனின் 'சுவிதா' வலைத்தளத்தில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த வலைத்தளத்தில் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இத்தகவலை தேர்தல் கமிஷன் நேற்று தெரிவித்தது.
அவற்றில் 44 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 10 ஆயிரத்து 819 விண்ணப்பங்கள் போலியானவை என்பதால் ரத்து செய்யப்பட்டன.
அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் இருந்து 23 ஆயிரத்து 239 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மேற்கு வங்காளம் (11,976), மத்தியபிரதேசம் (10,636) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வெறும் 17 விண்ணப்பங்களுடன் சண்டிகார் கடைசி இடத்தில் இருக்கிறது.