ஆந்திர பிரதேச நிலவரம்: தெலுங்கு தேசம்-16, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-4, பா.ஜ.க.-3, ஜே.என்.பி.-2 இடங்களில் முன்னிலை
|ஆந்திர பிரதேச மக்களவை தேர்தலில் தெலுங்கு தேச கட்சி மற்ற கட்சிகளை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது.
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சி சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் கடந்த மே 13-ந்தேதி நடந்த 4-ம் கட்ட தேர்தலில், சட்டசபையுடன் சேர்த்து மக்களவை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு சேர்த்து மொத்தம் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்களவை தேர்தலில் 454 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இதில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அனைத்து 25 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 23 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற தெலுங்கு தேச கட்சி 17 தொகுதிகளிலும், பா.ஜ.க. 6 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், எவரும் எதிர்பாராத வகையில், இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.