ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்: முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்
|விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
விஜயவாடா,
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார்.
இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல்-மந்திரிக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது.
சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார். இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி.) நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்-மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.