தி.மு.க சார்பில் களமிறங்கும் 21 வேட்பாளர்களில், 11 பேர் புது முகங்கள் யார் யார்?
|சேலம், தர்மபுரி, தேனி உள்ளிட்ட மக்களவைத்தொகுதிகளில் புதிய வேட்பாளர்களை தி.மு.க களமிறக்கி உள்ளது.
சென்னை,
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலை தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன்படி 11 புதுமுகங்களுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணிக்கு இந்த முறை தி.மு.க. வில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதே போல் தஞ்சாவூர் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த தி.மு.க உறுப்பினரான பழனிமாணிக்கத்திற்கும், தர்மபுரி செந்தில்குமாருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதே போல் சேலம் சிட்டிங் எம்பி-யான பார்த்திபன், பொள்ளாச்சி சண்முக சுந்தரம் ஆகியோருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. கோவை மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில் இந்த முறை கணபதி ராஜ்குமாருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் கோவை மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கோவை கணபதி ராஜ்குமார், சுமார் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2020-ல் அ.தி.மு.க. விலிருந்து விலகி அவர் தி.மு.க.வில் இணைந்தார்.
2021-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலிலேயே அவருக்கு சீட்டு வழங்கப்படலாம் என தகவல் வெளியாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு எம்.பி. சீட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி தி.மு.க. வில் இணைந்துள்ள மகேந்திரனுக்கு, கோவை அல்லது பொள்ளாச்சி தொகுதியில் சீட் வழங்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அறிமுக வேட்பாளராக தற்போது ஈஸ்வரசாமி பொள்ளாச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. வின் 11 புதிய வேட்பாளர்கள்
சேலம் செல்வகணபதி, தருமபுரி ஆ.மணி, தென்காசி(தனி) ராணி, ஆரணி தரணி வேந்தன், தேனி தங்க தமிழ்செல்வன், தஞ்சாவூர் முரசொலி, பெரம்பலூர் அருண் நேரு, பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, கள்ளக்குறிச்சி மலையரசன், கோவை கணபதி ராஜ்குமார், ஈரோடு பிரகாஷ் ஆகியோர் புதிய வேட்பாளர்களாக தி.மு.க. அறிமுகம் செய்துள்ளது.
இதில், கடந்த மக்களவைத் தேர்தலில் ஆரணி, தேனியில் காங்கிரசும், கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், ஈரோட்டில் ம.தி.மு.க. வும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிபார்க்கப்பட்டது. இது போலவே 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
உதயநிதியின் இந்த கோரிக்கை தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மூத்தவர்கள், இளையவர்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கியே வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.