அமித்ஷாவின் காரைக்குடி ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து
|காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவையில் பிரசாரம் செய்கிறார்.
இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தருகிறார் அமித்ஷா. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.