மராட்டியத்தில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு - காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டி
|மராட்டிய மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தொகுதி பங்கீடு மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் மராட்டியத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது. அதன்படி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.