< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி - வேட்புமனுவில் தகவல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி - வேட்புமனுவில் தகவல்

தினத்தந்தி
|
16 April 2024 6:45 PM IST

டிம்பிள் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி சார்பில் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியான டிம்பிள் யாதவ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மந்திரி ஜெய்வீர் சிங் போட்டியிடுகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு மெயின்புரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அந்த சமயத்தில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரது சொத்து மதிப்பு ரூ.14 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று டிம்பிள் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.15.5 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அவரிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.10.44 கோடி என்றும், அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.5.10 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், அவரது கணவர் அகிலேஷ் யாதவுக்கு சொந்தமான அசையும் சொத்து மதிப்பு ரூ.9.12 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.17.22 கோடி என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிம்பிள் யாதவிடம் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கணிணி, 2.77 கிலோ தங்க நகைகள், 203 கிராம் முத்துக்கள் மற்றும் 127.75 காரட் வைரம் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த டிம்பிள் யாதவ், 1999-ம் ஆண்டு அகிலேஷ் யாதவை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் அவர் போட்டியிட்டபோது அவரது சொத்து மதிப்பு ரூ.12.98 கோடி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் வருமான வரி அறிக்கையின்படி கடந்த 2021-22ல் டிம்பிள் யாதவின் அறிவிக்கப்பட்ட வருமானம் ரூ.78.66 லட்சமாக இருந்த நிலையில், 2022-23ல் அவரது வருமானம் ரூ.76.5 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்