'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 'அக்னிபத்' திட்டம் ரத்து செய்யப்படும் - ராகுல்காந்தி
|நிரந்தர பணியுடன் கூடிய ஆள்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்ப்பதற்காக 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன்கீழ், 17½ வயது முதல் 21 வயதுவரை கொண்ட இளைஞர்கள், 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் முப்படைகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களில் 25 சதவீதம்பேர் மட்டும் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணியில் வைத்துக் கொள்ளப்படுவார்கள். மற்றவர்கள் 4 ஆண்டுகளுடன் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'எக்ஸ்' வலைதளத்தில், "'அக்னிபத்' திட்டம் என்பது இந்திய ராணுவத்துக்கும், நாட்டை பாதுகாக்க கனவு காணும் துணிச்சலான இளைஞர்களுக்கும் பெரும் இழுக்கு ஆகும்.
இது, இந்திய ராணுவத்தின் திட்டம் அல்ல, நரேந்திர மோடி அலுவலகத்தில் வகுக்கப்பட்டு, ஆயுதப்படைகள் மீது திணிக்கப்பட்ட திட்டம். வீர மரணம் அடைந்த வீரர்களை வெவ்வேறு விதமாக நடத்தக்கூடாது. நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 'தியாகி' அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும்.
எனவே, 'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், 'அக்னிபத்' திட்டம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இருந்ததுபோல், நிரந்தர பணியுடன் கூடிய ஆள்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.