தேர்தல் பணிக்கு பின்... வீடு புகுந்து 2 சகோதரிகள் பாலியல் துன்புறுத்தல்; சி.ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்
|சி.ஆர்.பி.எப். வீரர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு வங்காள பிரிவின் ஐ.ஜி. பிரேந்திர குமார் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பரூயிப்பூர் நகரில் தேர்தல் பணியில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் சிறப்பு ரெயிலில் செல்வதற்காக, நேற்றிரவு கொல்கத்தா ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
அப்போது, ரெயில் நிலையத்திற்கு அடுத்து இருந்த வீடு ஒன்றிற்குள் திடீரென புகுந்துள்ளார். அந்த வீட்டில் 2 சகோதரிகள் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதனால், அவர்கள் இருவரும் அச்சத்தில் சத்தம் போட்டுள்ளனர்.
அவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் தப்பியோட முயன்ற சி.ஆர்.பி.எப். வீரரை பிடித்து வைத்தனர். பின்பு, போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் வந்து அவரை, அழைத்து சென்றனர்.
2 சகோதரிகள் சித்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அந்த வீரர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி மேற்கு வங்காள பிரிவின் ஐ.ஜி. பிரேந்திர குமார் சர்மா கூறும்போது, இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை தொடங்கப்பட்டு விட்டது.
இதுபோன்ற விசயங்களை சி.ஆர்.பி.எப். சகித்து கொள்ளாது. அவர் குற்றம் செய்தது கண்டறியப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.