< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
கொல்லம் தொகுதியில் போட்டியிட நடிகர் முகேஷ் வேட்புமனு தாக்கல்
நாடாளுமன்ற தேர்தல்-2024

கொல்லம் தொகுதியில் போட்டியிட நடிகர் முகேஷ் வேட்புமனு தாக்கல்

தினத்தந்தி
|
28 March 2024 5:26 PM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார்

திருவனந்தபுரம்,

கேரளாவில் வருகிற ஏப்ரல் 26-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4-ம் தேதி கடைசி நாள் ஆகும். கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் அவரை ஆளும் கட்சி களம் இறக்கி உள்ளது.

நடிகர் எம்.முகேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். காலை 11:30 மணியளவில் கொல்லம் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் புடை சூழ ஊர்வலமாக புறப்பட்ட முகேஷுக்கு, கொல்லம் மீனவர்கள் சங்கத்தின் சார்பாக டெபாசிட் தொகை வழங்கப்பட்டது. இவர் கொல்லம் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான என்.தேவி தாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்ட ஆர்.எஸ்.பி. கட்சியை சேர்ந்த காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி வேட்பாளர் என்.கே.பிரேமச்சந்திரன் 4,99,677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளரும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவருமான கே.என்.பாலகோபால், 3 லட்சத்து 50 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட வக்கீல் கே.வி.சாபு ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்