தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாகு
|பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். 19-ம் தேதி விடுமுறை இல்லை என தெரிந்தால் 18-ந் தேதியே புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம்.
17-ம் தேதி மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ளது. பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணி நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் நாளை ஒருநாள் தபால் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குக்களை தபால் மூலமாக அனுப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.