< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
Sanjay Singh demands ban on exit polls
நாடாளுமன்ற தேர்தல்-2024

கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
3 Jun 2024 5:32 PM IST

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்றும் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

புதுடெல்லி:

இந்தியாவில் தேர்தல் காலங்களில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதுடன், விவாதப்பொருளாகிறது. குறிப்பாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரிய அளவில் விவாதத்தை கிளப்புகின்றன. வாக்குப்பதிவு நாளன்று, வாக்காளர்கள் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறிய உடன் குறிப்பிட்ட வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுகின்றன.

இந்த கருத்துக் கணிப்புகளை வைத்து ஓரளவு வெற்றி தோல்வியை யூகிக்க முடிகிறது. சில சமயம் இந்த கணிப்புகள் பொய்யாகிவிடுகின்றன. கருத்துக் கணிப்புகள் முறையாக நடத்தப்படுவதில்லை என அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுண்டு.

அவ்வகையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வழக்கம்போல் விவாதப்பொருளாகி உள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றும், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார் என்றும் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இந்த கணிப்புகளை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் இன்று வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருத்துக் கணிப்புகள் ஒருமுறை அல்ல, பலமுறை தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் கருத்துக் கணிப்புகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இது, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக நாட்டு மக்கள், நிர்வாக அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் செல்வாக்கை திணிக்கும் தவறான முயற்சி ஆகும். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்தியா கூட்டணி 295 இடங்களை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என தெரிவிக்கும் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்