முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவான முடிவு... பிரதமர் மோடி பேச்சு
|பா.ஜ.க. தலைமையிலான அரசின் மிக முக்கிய முடிவால், ஹஜ் ஒதுக்கீடு அதிகரித்ததுடன் மட்டுமின்றி, விசா விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அலிகார்,
உத்தர பிரதேசத்தின் கவுதமபுத்த நகர், மீரட், பாக்பத், காசியாபாத், அலிகார், மதுரா மற்றும் புலந்த்சாகர் ஆகிய தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அலிகார் நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். அவர் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே உரையாற்றும்போது, முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்காக பா.ஜ.க. தலைமையிலான அரசு ஒரு மிக முக்கிய முடிவை எடுத்துள்ளது என கூறினார்.
இதற்கு முன்பு, ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீடு குறைவாக இருந்தது. இதனால், நிறைய சண்டை ஏற்பட்டது. லஞ்சம் கூட கொடுக்கப்பட்டது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பை செல்வாக்கு பெற்ற மக்கள் மட்டுமே பெற முடியம் என்ற நிலை இருந்தது.
இந்தியாவில் உள்ள எங்களுடைய முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி, சவுதி அரேபிய இளவரசரிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டேன் என்றார்.
இந்தியாவில் இன்று, ஹஜ் ஒதுக்கீடு அதிகரித்ததுடன் மட்டும் இல்லாமல், விசா விதிகளும் கூட எளிமையாக்கப்பட்டு உள்ளன. இந்த அரசு மிக முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது என அவர் பேசியுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஆயிரக்கணக்கான சகோதரிகளின் ஹஜ் பயணத்திற்கான கனவுகளையும் தன்னுடைய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருக்கிறேன் என்றும் பேசினார்.
இதற்கு முன் முஸ்லிம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், இந்த அரசு ஆண்கள் துணையின்றி பெண்கள் ஹஜ் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.