மக்களவைக்கு தேர்வான புதிய எம்.பி.க்களில் 93 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்
|மக்களவைக்கு தேர்வாகியுள்ள புதிய எம்.பி.க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில் 504 (93 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் என்று தேர்தல் உரிமை அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2019 தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 475 (88 சதவீதம்) கோடீஸ்வரர்களாகவும், 2014-ம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 443 (82 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்களாகவும் இருந்தனர்.
இந்த முறை வெற்றி பெற்றுள்ள கோடீஸ்வர வேட்பாளர்களில் முதல் 3 இடங்களை பிடித்திருப்பவர்கள் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பட்டியலில் ஆந்திராவின் குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சந்திர சேகர் பெம்மாசனி ரூ.5,705 கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து 2-வது இடத்தில் ரூ.4.568 கோடி சொத்து மதிப்புடன் தெலுங்கானாவின் செவாலா தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் விஸ்வேஸ்வர ரெட்டி உள்ளார். 3-வது இடத்தில் ரூ.1.241 கோடி சொத்து மதிப்புடன் அரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் நவீன் ஜிண்டால் இருக்கிறார்.
2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 240 பா.ஜ.க. வேட்பாளர்களில் 227 (95 சதவீதம்) பேரும், காங்கிரஸ் கட்சியின் 99 வெற்றி வேட்பாளர்களில் 92 (93 சதவீதம்) பேரும், தி.மு.க.வின் 22 வெற்றி வேட்பாளர்களில் 21 (95 சதவீதம்) பேரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 வெற்றி வேட்பாளர்களில் 27 (93 சதவீதம்) பேரும், சமாஜ்வாடி கட்சியின் 37 வெற்றி வேட்பாளர்களில் 34 (92 சதவீதம்) பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
அதே போல் ஆம் ஆத்மி(3), ஜே.டி.யு.(12) மற்றும் தெலுங்கு தேசம்(16) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்கள் அனைவருமே கோடீஸ்வரர்கள் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 2024 மக்களவை தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 19.6 சதவீதமாக இருந்துள்ளதாகவும், கோடீஸ்வரர் அல்லாத வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு 0.7 சதவீதமாக இருந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 42 சதவீதத்திற்கும் மேலான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. அதே போல் 19 சதவீத வெற்றி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 5 முதல் 10 கோடி ரூபாய் வரையிலும், 32 சதவீத வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 1 முதல் 5 கோடி ரூபாய் வரையிலும் உள்ளது. அதே சமயம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 20 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.