< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம்  -  சத்யபிரதா சாகு பேட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

ஏப்ரல் 1-ம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம் - சத்யபிரதா சாகு பேட்டி

தினத்தந்தி
|
27 March 2024 3:11 PM IST

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.68 கோடி ரூபாய் மதிப்பில் பணம்,பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 பேர் மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர்.முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.90லட்சம் ஆகும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தேர்தலை ஒட்டி புதிதாக 177 போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 68144 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிக்காக 7 லட்சம் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.33.31 கோடி ரொக்கம், ரூ.33 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தனியார் கட்டிடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டு 13ம் தேதிக்குள் விநியோகிக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு அதிகாரிகள் கொண்டு பூத் சிலிப் விநியோகிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்