'அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு' - ராகுல் காந்தி வாக்குறுதி
|மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 50% இல்லையா? இந்த சூழலில், மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50% ஆக இருப்பது ஏன்? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது? ஏன் இன்றும் 3-ல் ஒரு பெண் மட்டுமே பணியில் இருக்கிறார்? 10 அரசு வேலைக்கான இடங்களில் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது ஏன்?
மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை நடத்தும் அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எனவே, அனைத்து அரசு பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள். அரசு பதவிகளில் 50% பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். சக்திவாய்ந்த பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள்."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.