5 வங்கி கணக்குகள்: லாலு பிரசாத் யாதவ் மகளின் சொத்து மதிப்பு எவ்வளவு?
|ரோகிணி ஆச்சார்யா பீகார் மாநிலம் சரண் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பாட்னா,
பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் மோதுகின்றன. இந்த தேர்தலில் பீகாரின் சரண் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா போட்டியிடுகிறார்.
அங்கு அவர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து விவரங்கள் தெரிவித்துள்ளார். அதன்படி ரோகிணி ஆச்சார்யாவுக்கு ரூ.15.82 கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
தன்னிடம் ரூ.2.99 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.12.82 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள ரோகினி தனது கணவரிடம் ரூ.6.92 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.12.94 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
5 வங்கி கணக்குகளை வைத்துள்ள ரோகினியிடம் ரூ.29.70 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.3.85 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.