< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி

தினத்தந்தி
|
18 March 2024 4:17 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்வதில் அவசரம் காட்ட தொடங்கி உள்ளன.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம் என்பது இறுதியானாலும் தொகுதி எது என்பது இழுபறியாக இருந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு காங்கிரஸ். ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இதன்படி காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 3 தொகுதிகள் மாற்றப்பட்டு புதிய தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. தி.மு.க. கூட்டணியில் 21 தொகுதிகளில் தி.மு.க.வும், எஞ்சிய 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணி

அ.தி.மு.க. கூட்டணியில் யார் சேருவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் சேருவது உறுதியாகி இருந்தது. தே.மு.தி.க. அந்த கூட்டணியில் சேருவது உறுதியாகி விட்டதாக இன்று தகவல் வெளியானது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெறுகிறது.

பா.ஜ.க கூட்டணி

பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க., ஒ.பன்னீர் செல்வம் அணி, டி.டி.வி . தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெஸ்ட் ராமசாமியின் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம் பெறுகிறது.

நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி நிலவுகிறது.

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.

நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் போட்டியிடுகிறதா? தனித்து போட்டியிடுகிறதா? என்பதில் இழுபறி நீடித்து வந்தது. பா.ம.க.வை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அ.தி.மு.க. முயற்சி மேற்கொண்டது. அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், அ.தி.மு.க. - பா.ம.க. இடையே கூட்டணி ஏற்படவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பா.ம.க. மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்