< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
2 ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள் - ஆந்திராவில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல்-2024

2 ஆயிரம் கோடி ரூபாய் பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள் - ஆந்திராவில் பரபரப்பு

தினத்தந்தி
|
2 May 2024 9:56 PM IST

தேர்தல் சமயத்தில் 4 கண்டெய்னர்களில் மொத்தம் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி சோதனைச் சாவடி வழியாக அடுத்தடுத்து வந்த 4 கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அந்த கண்டெய்னர்கள் கேரளாவில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு கண்டெய்னரிலும் ரூ.500 கோடி என மொத்தம் 4 கண்டெய்னர்களில் ரூ.2,000 கோடி இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் நடத்திய உயர்மட்ட விசாரணையில், அந்த பணம் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஐதராபாத் ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்படுவதும், அந்த பணம் முழுவதும் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்