'5 கட்ட தேர்தல்களில் 310 இடங்கள் கிடைத்துவிட்டன; இனி 400-க்கு மேல் கிடைக்கும்' - அமித்ஷா
|5 கட்ட தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 310 இடங்கள் கிடைத்துவிட்டதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாட்னா,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் 1-ந்தேதி 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் 5 கட்ட தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 310 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீகார் மாநிலம் கராகத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 5-வது கட்டத்தின் முடிவிலேயே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 310 இடங்கள் கிடைத்துவிட்டன. இனி 7-வது கட்ட வாக்குப்பதிவின் முடிவில் எங்களுக்கு 400 இடங்கள் கிடைத்துவிடும்.
'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி மீது ஒரு ரூபாய் அளவிற்கு கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. இந்த தேர்தலில், ஒருபுறம் செல்வ செழிப்பில் பிறந்த ராகுல் காந்தி இருக்கிறார். மறுபுறம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும், தேநீர் விற்பனை செய்தவருமான நரேந்திர மோடி இருக்கிறார்.
இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்கும்போது ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவிடுகிறார். ஆனால் 23 ஆண்டுகளாக ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் பிரதமர் மோடி, தீபாவளி பண்டிகையை நமது ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.